கொரோனா குறைந்ததால் 6 மாதங்களுக்கு பின் கேரளாவில் 25ம் தேதி தியேட்டர்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா குறைந்து வருவதையடுத்து,  6 மாதங்களுக்கு பின்னர் வரும் 25ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. கேரளாவில் 2வது கொரோனா அலை பரவியதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகா உள்பட மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் கேரளாவில் தொற்று குறையாததால் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மெதுவாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாளை மறுநாள் (25ம் தேதி) முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அரசு சம்மதம் தெரிவித்தது. ஆனாலும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என்று தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூறினர்.

இதையடுத்து தியேட்டர் உரிமையாளர் சங்கம் மற்றும் பல்வேறு சினிமா துறை சங்கங்களை சேர்ந்தவர்களுடன் நேற்று கேரள கலாச்சார துறை அமைச்சர் சஜி செரியான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி தவிர 5 சதவீதம் கேளிக்கை வரி ரத்து செய்ய வேண்டும். தியேட்டர் மூடப்பட்டிருந்த நாட்களுக்கான மின் கட்டண வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். கட்டிட வரியிலும் சலுகை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை சங்கத்தினர் முன் வைத்தனர். இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து உடனடியாக உரிய நடவடிக்ைக எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இதையடுத்து நாளை மறுநாள் (25ம் தேதி) முதல் தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு பின் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய படங்கள்: ரசிகர்கள் குஷி

கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படுவதால், இந்த வாரம் முதல் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. துல்கர் சல்மான் நடித்த ‘குருப்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ உள்பட பல்வேறு புதிய படங்கள் திரைக்கு வரவுள்ளன. இதனால் கேரள சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: