அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே பதில் 100 கோடி தடுப்பூசி இந்தியா எந்த இலக்கையும் எட்டும்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘100 கோடி தடுப்பூசி, அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளது. கடினமான இலக்குகளை நிர்ணயிக்கவும், அதை எட்டவும் புதிய இந்தியாவால் முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கி, 9 மாதத்தில் 100 கோடி டோஸ் தடுப்பூசி இலக்கு நேற்று முன்தினம் எட்டப்பட்டது.இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறியதாவது: இன்று நம் நாட்டில் நம்பிக்கை பிறந்துள்ளது. நம் அனைவருக்கும் பெருமை அளிக்கக் கூடிய இந்தியாவின் தடுப்பூசி திட்டம், அறிவியலில் தொடங்கி, அறிவியலால் செயல்படுத்தப்பட்ட அறிவியல்பூர்வமானது.

கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் கைதட்டுதல், விளக்கேற்றுதல் போன்ற முயற்சிகளை சிலர் விமர்சனம் செய்தனர். இந்த முயற்சிகள் எப்படி வைரசிடமிருந்து நம்மை பாதுகாக்கும் என கேட்டனர். இந்த முயற்சிகள் மக்கள் பங்களிப்பையும், அவர்களின் ஒற்றுமையையும் பிரதிபலிப்பவை. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் திறன் மீது சந்தேகம் கிளப்பப்பட்டது. இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா எப்படி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் 100 கோடி தடுப்பூசி இலக்கு பதில் அளித்துள்ளது.

இது வெறும் எண்ணிக்கை அல்ல. புதிய இந்தியாவின், நாட்டின் திறனுக்கான அடையாளம். புதிய சகாப்தம் எழுதப்பட்டுள்ளது. புதிய இந்தியாவால் கடினமான இலக்கை நிர்ணயித்து அதை எட்ட முடியும், அதற்கான திறன் உண்டு என்பதை உலகிற்கு காட்டி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் வைத்த நம்பிக்கை காரணம்

பிரதமர் மோடி தனது இணையபக்கத்தில் (பிளாக்) எழுதிய கட்டுரையில், ‘இந்தியா 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த 3-4 ஆண்டு ஆகிவிடும். மக்கள் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர மாட்டார்கள். ஊரடங்கால் தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாது என பலரும் பலவாறாக பேசினர். ஆனால் இன்று இவை அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளது. அனைவரும் பங்களிப்பை வழங்கும்போது எதுவும் சாத்தியமே. நமது சுகாதார பணியாளர்கள் மலை, ஆறுகளை கடந்து சிக்கலான இடத்திற்கும் சென்று தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி மீதான சிறிய தயக்கத்தை போக்க நமது இளைஞர்கள், சமூக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் சமூக, மத தலைவர்கள் பங்காற்றினர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். அவர்களின் ஒத்துழைப்பாலேயே இந்த சாதனை இலக்கு சாத்தியமானது’ என்றார்.

விஐபி கலாசாரம் ஒழிப்பு

‘கொரோனா வைரஸ் எந்த பாகுபாடும்  இல்லாமல் அனைவரையும் தொற்றியது. அதே போல அதிலிருந்து மக்களை  பாதுகாப்பதிலும் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது.  அதனால்தான் தடுப்பூசி செலுத்துவதில் விஐபி கலாச்சாரம் முற்றிலும்  தவிர்க்கப்பட்டது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு பணக்காரராக  இருந்தாலும் அவர்களும் சாமானிய மனிதனைப் போலவே தடுப்பூசி பெறுகிறார்கள்,’ என்று தனது பேச்சில் மோடி குறிப்பிட்டார்.

அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘அமித்ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் பல ஆண்டுகளாக அமித்ஷாவுடன் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். கட்சி மற்றும் அரசை வலுப்படுத்துவதற்காக அவர் சிறப்பாக பணியாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். அதே ஆர்வத்துடன் அவர் நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும். அவரது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories: