மாநில மொழிகளை துணை பாடமாக்கி இந்தியை முதன்மை பாடமாக்கிய சிபிஎஸ்இ : பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்!!

சண்டிகர் : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமின்றி தற்போது தேர்விலும் இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 12ம் வகுப்பிற்கு நவம்பர் 16 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

முதல்முறையாக முதன்மை பாடங்கள் மற்றும் துணை பாடங்கள் என பிரித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அட்டவணை சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களை முதன்மை பாடங்களாக குறிப்பிட்டுள்ள சிபிஎஸ்இ, தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட பிராந்திய மொழி மற்றும் அயல்நாட்டு மொழிகள் துணை பாடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாடத் திட்டத்திலும் தேர்விலும் இந்தியை மட்டும் ஒன்றிய அரசு பிரதானபடுத்துவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து ட்வீட் செய்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, சிபிஎஸ்இ-யின் தன்னிச்சையான முடிவு கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் இளைஞர்கள் தாய் மொழியை படிப்பதற்கான அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஒன்றிய அரசு தொடர்ந்து மாநில மொழிகளை புறக்கணிப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறுகின்றனர்.

Related Stories:

More
>