நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்: தடுப்பூசி மூலப்பொருட்கள் தடையில்லா விநியோகம்

நியூயார்க்: உலகளவில் தடுப்பூசி மூலப்பொருள் விநியோகம் தடையின்றி நடைபெற வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒரு வார கால பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு, 36வது வருடாந்திர ஜி30 சர்வதேச வங்கி கருத்தரங்கு கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகையில், ‘‘தீவிரமான அணிதிரட்டல், சமமான நிதி ஒதுக்கீடு, காலநிலை மற்றும் தொற்றுநோய் பாதுகாப்பில் உலகளாவிய நன்மைக்கு தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு ஓர் வலுவான சர்வதேச நிதி கட்டமைப்பு அவசியமாகும். மேலும் தடுப்பூசி மூலப்பொருட்கள் விநியோகம் தடையின்றி நடைபெறும் வகையில் திறந்த விநியோகச் சங்கிலியை பராமரிக்க வேண்டியதும் அவசியம். புதிய சவால்களுக்கு திறம்பட பதிலளிக்க உலக சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்’’ என்றார்.

Related Stories:

More
>