கொரோனா தளர்வுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் அதிகரிப்பு: ஒரே நாளில் 3.27 லட்சம் பேர் பயணம்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை முடங்கியது. கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை உள்நாட்டு விமானங்கள் தடை செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைவு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக  33 சதவீத உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவை மீண்டும் 100 சதவீத பயணிகளுடன் எந்த வித கட்டுப்பாடும் இன்றி நேற்று முதல் இயக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளுக்கு பின் அதிகபட்ச பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா தனது டிவிட்டர் பதிவில்,‘‘அரசின் ஆக்கப்பூர்வமான கொள்கைகள் காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 2,372 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டது. இதில் மொத்தம் 3,27,923 பயணிகள் பயணம் செய்துள்ளனர். உள்நாட்டு விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு முன்னர் உள்நாட்டு விமானங்களில் நாள்தோறும் ஏறத்தாழ 4.25 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். இதனிடையே டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அலையன்ஸ் ஏர் விமான சேவையை அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கை:  ‘‘அலையன்ஸ் ஏர் விமானங்கள் கொல்கத்தாவுடன் வடகிழக்கு நகரங்களான கவுகாத்தி, அய்ஸ்வால், மற்றும் ஷில்லாங் உள்ளிட்டவற்றுக்கு இயக்கப்படும். வாரத்துக்கு 4 நாட்கள் அலையன்ஸ் ஏர் விமான சேவையை பெறலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 113 விமானங்கள் புறப்பட்டு சென்றன. அதேபோல் 111 விமானங்கள் வந்து சேர்ந்தன. இதன்மூலம் நாளொன்றுக்கு 224 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் உள்நாட்டு விமானங்களில் சென்று வரும் பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Related Stories:

More
>