கேரளாவை புரட்டிப் போட்ட கன மழை, பெருவெள்ளம்: நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் கதி என்ன? தேடுதல் பணியில் ராணுவம், கடற்படை தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவை கனமழை,  பெருவெள்ளம் புரட்டி போட்டது. தொடர்ந்து கனமழை  மிரட்டி வருகிறது. இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல் இன்று மீட்கப்பட்ட நிலையில் 13 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், கடற்படையினர் முடுக்கி விடப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காசர்கோடு, வயநாடு ஆகிய 2 மாவட்டங்களை தவிர, எர்ணாகுளம், கண்ணூர், மலப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பேய்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை, பெரியாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த மழை காரணமாக முல்லை பெரியாறு, இடுக்கி, நெய்யாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து நெய்யார், மலம்புழா, அருவிக்கரை உள்பட அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று கனமழையால் கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல், பிலாபள்ளி, இடுக்கி மாவட்டம் கொக்கையார் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு உடனே பொது மக்களும், மீட்பு படையினரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மிகவும் தாமதமாகவே மீட்பு பணிகள் தொடங்கின. நேற்று கூட்டிக்கல் பகுதியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. விடிய விடிய மீட்பு பணிகள் நடந்தது. இதையடுத்து இன்று காலை மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மீட்கப்பட்டவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து கனமழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இன்று காலை முதல் கடற்படை, விமானபடை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே கூட்டிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.

அவர்களில் சினி (35), அவரது மகள் சோனா (10), தாய் கிலாரம்மா ஜோசப் (65) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. சினியின் கணவர் மார்ட்டின், அவர்களது குழந்தைகளான சினேகா (13), சாந்திரா (9) ஆகியோரை தேடும் பணி நடந்து வருகிறது. இதேபோல் அருகில் உள்ள பிலாபள்ளியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஜோமியின் மனைவி சோனி (45), அவரது மகன் அலன் (8), மோகனன் மனைவி சரசம்மா (58), வேணு மனைவி ரோஸ்னி (55) ஆகியோரை காணவில்ைல. இடுக்கி மாவட்டம் கொக்கையாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த பகுதியிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம், கோட்டயத்தில் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் சூலூரில் இருந்து விமானப்படை வரவழைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: