போதை வழக்கில் பாஜ பிரமுகர் மருமகன் விடுவிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு மிரட்டல்: பாதுகாப்பை அதிகரித்து அரசு நடவடிக்கை

மும்பை: தேசிய போதை பொருள் தடுப்பு துறையினரின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்த மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சருக்கு வழங்கப்பட்ட பாதுப்பானது ஒய் பிளஸ் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்த வழக்கில், பாஜ பிரமுகரின் மருமகன் கைது செய்யாமல் விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறி அமைச்சர் விமர்சனம் செய்திருந்த நிலையில், மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.அமைச்சர் நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது மருமகன் சமீர் கான். போதை பொருள் வழக்கு தொடர்பாக ஜனவரி மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் சமீர் கானை சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. சமீர் கானிடம் 194.265 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.  இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கைப்பற்றப்பட்டது கஞ்சா இல்லை என ஆய்வுக் கூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர். கஞ்சாவுக்கு பதிலாக புகையிலையை வைத்து போலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

மருமகன் போதைப்பொருள் வழக்கில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நவாப் மாலிக், நீதிமன்ற தீர்ப்பால் தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கிவிட்டதாக கூறினார். இந்த நிலையில் கடந்த 3ம் தேதி மும்பை அருகே நடுக்கடலில் கோவா நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை விருந்து நடப்பதாக, தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகள் போல் சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 20 பேர், கப்பலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது மற்றும் பரிவர்த்தனை செய்ததை கண்டு பிடித்தனர்.இதுதொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மேலும் 12 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது எண்ணிக்கை 20 ஆனது. ஆனால் போதை பொருள் அதிகாரிகளின் ரெய்டு போலியானது என்று, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

சொகுசு கப்பலில் கடந்த 3ம் தேதி மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை மும்பை போலீசாரும் உறுதி செய்துள்ளனர். ஆனால், ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்ற மூன்று பேரையம் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் விடுவித்துவிட்டனர். இவ்வாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தாமலேயே வழக்கில் சேர்க்காமல் விடுக்கப்பட்டு விட்ட 3 பேரில் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மருமகன் என்றும் அமைச்சர் நவாப் மாலிக் தெவித்திருந்தார். இது மட்டுமின்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் மீது அமைச்சர் நவாப் மாலிக் சுமத்தி வந்தார்.இவ்வாறு அமைச்சர் நவாப் மாலிக் விமர்சனம் செய்திருந்தை தொடர்ந்து   அவருக்கு பலர் மிரட்டல் விடுத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் போன் மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.  இதை தொடர்ந்து அமைச்சர் நவாப் மாலிக்கின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருடைய பாதுகாப்பு ஒய் பிளஸ் ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஒன்றிய பாஜ அரசு ஒன்றிய புலனாய்வு ஏஜென்சிகள் மூலம் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.

மிரட்டல் வந்தது குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது:கப்பலில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பற்றி நான் கருத்து கூறிய பிறகு, எனக்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் எனது மருமகன் சமீர் கானை இழுப்பதன் வைப்பதன் மூலம் என்னையும் சிக்க வைக்க முயற்சித்தனர். கோர்ட்டு மூலம் இது முறியடிக்கப்பட்டு விட்டது. தேசிய போதைப்பொருள்தடுப்பு பிரிவு பற்றி நான் கூறியதை தொடர்ந்து, அந்த அமைப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக பாஜ தலைவர்கள் என்னை தாக்குகின்றனர். எனது மருமகன் கைதுக்கு பழிவாங்குவது போல் கூறுவதாக தெரிவிக்கின்றனர், என்றார். சமீபத்தில் பேட்டிய ளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சிலரை குறி வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். மும்பை போலீசிலும் போதை பொருள் தடுப்பு பிரிவு உள்ளது.

மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளை விடவும் சிறப்பாக செயல்படுகின்றனர். மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு துறையினர் அறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள். ஏஜென்சிகளின் நடவடிக்கைகளை மாநில பாரதிய ஜனதாவினர் ஆதரிக்கிறார்கள் என கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில்,  போதைப்பொருள் வழக்கில் பாஜ பிரமுகர் மருமகன் விடுவிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை தொடர்ந்து இந்த மிரட்டல்கள் வந்துள்ளதும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: