அறந்தாங்கி அருகே அரசர்குளம் புது ரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்

அறந்தாங்கி : திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு அறந்தாங்கி வழியாக செல்லும் ரயில்பாதை உள்ளது. அறந்தாங்கியில் இருந்து அரசர் குளம், சுப்பிரமணியபுரம், கொடிவயல், ரெட்டவயல், பெருமகளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசர் குளம் புதுரோடு பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கை கடந்து செல்ல வேண்டும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, புதுரோடு பகுதியில் ஆட்களால் மூடி திறக்கப்படும் கேட் இருந்தது.

அகல ரயில் பாதை அமைக்கும்போது, புதுரோடு பகுதியில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்கப்பட்டபோது, அரசர்குளம் தெற்கு ஊராட்சித் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் அப்பகுதி மக்கள் சுரங்கப்பாதை அமைத்தால், தங்கள் பகுதிக்கு முக்கிய கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாது. சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கினால் வாகனங்கள் செல்ல முடியாது என்று கூறி சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரயில்வே நிர்வாகம் புதுரோடு பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தது.

இந்த நிலையில் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர் வெளியேற வழியில்லாமல் சுரங்கப்பாதையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் சிறிய ரக வாகனங்கள் சுரங்கப்பாதையில் தண்ணீருக்குள் மூழ்கி விடுகின்றன. வாகனங்கள் தண்ணீரில் மூழ்குவதால், வாகனத்தின் சைலன்சரின் உள்பகுதியில் தண்ணீர் புகுவதால் வாகனங்களின் இன்ஜின் ஆப் ஆகி விடுகின்றன. இதனால் வாகனத்தின் உள்ளே உள்ளவர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

சமீபத்தில் புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி பெண் மருத்துவர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.அதேபோல அறந்தாங்கி அருகே அரசர்குளம் புதுரோடு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரில் சிக்கி வாகனத்தில் செல்வோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோரின் வாகனங்கள் தண்ணீரில் சிக்கி, கீழே விழும் நிலையும் உள்ளது.

எனவே ரயில்வே நிர்வாகமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்து அரசர்குளம் புதுரோடு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்த தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: