ஆயுதப்பூஜையை முன்னிட்டு சேலத்தில் பொரி, சாம்பல் பூசணி, பழங்கள் விற்பனை அமோகம்

சேலம்: ஆயுதப்பூஜையை முன்னிட்டு, சேலம் கடைவீதி பகுதிகளில் பொரி, சாம்பல் பூசணி, பழங்கள், வாழைத்தார், வாழைக்கன்றுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஆயுதப்பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனம், பட்டறைகள் மற்றும் வீடுகளில் பொருட்களை சுத்தம் செய்து படையலிடுவது வழக்கம். திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைக்கப்படும். நடப்பாண்டு நாளை (14ம் தேதி) ஆயுதப்பூஜையும், 15ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சேலம் பால் மார்க்கெட், கடைவீதி, காந்திசிலை, அம்மாப்பேட்டை காந்தி மைதானம், பட்டைகோயில், வ.உ.சி. மார்க்கெட், ஆனந்தா காய்கறி மார்க்கெட் உள்பட பல இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. சேலம் கடைவீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, கொய்யா, எலுமிச்சை பழம், ஆரஞ்சு, வாழைப்பழம், தேங்காய், மாஇலை, கலர் ஜிகினா, பேப்பர் அலங்கார தோரணங்கள், பொரி, அவல், வெற்றிலை, வாழைக்கன்று, விபதி, குங்குமம், சந்தனம், சாம்பிராணி, ஊதுப்பத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்தே மக்கள் ஆர்வமாக வந்து சாம்பல் பூசணி, வாழைக்கன்று, பொரி, பூ உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து சாம்பல் பூசணி மொத்த வியாபாரிகள் கூறியதாவது: ஆயுதப்பூஜை நாளில் திருஷ்டி கழிக்க பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் சாம்பல் பூசணிக்காயை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ பூசணிக்காய் ரூ10 முதல் ரூ12 வரை விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் வாங்கிச் செல்லும் சில்லரை வியாபாரிகள், ஒரு கிலோ ரூ12 முதல் ரூ15 வரை விற்பனை செய்கின்றனர்.

நாளை ஆயுதப்பூஜை நாளில் விற்பனை இன்னும் சுறுசுறுப்பாக இருக்கும். தற்போது 100 டன் பூசணிக்காய் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும், சேலம் மாவட்டம் முழுவதும் 200 முதல் 300 டன் அளவில் சாம்பல் பூசணி வியாபாரம் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல், சேலம் மளிகை வியாபாரிகள்  கூறுகையில், ‘‘ஆயுதப்பூஜையையொட்டி மளிகைக்கடைகளில் சிவப்பு, வெள்ளை  கொண்டைக்கடலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

விளக்கு எண்ணெய், விபதி,  சந்தனம், குங்குமம், சாம்பிராணி, ஊதுப்பத்தி, கற்பூரம் உள்ளிட்டவைகளின்  விற்பனை அமோகமாக உள்ளது’’ என்றனர். சேலம் கடைவீதியில் பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழை உள்பட பல்வேறு ரக வாழைத்தார்கள் குவிக்கப்பட்டு விற்பனை ஜோராக நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பூக்கள் விலை உயர்வு

ஆயுதப்பூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ800 என அதிகரித்துள்ளது. முல்லை ரூ700, ஜாதிமல்லி ரூ240, காக்கட்டான் ரூ400, சம்பங்கி ரூ180, அரளி ரூ350, வெள்ளை அரளி ரூ300, மஞ்சள் அரளி ரூ300, செவ்வரளி ரூ350, ஐ.செவ்வரளி ரூ350, நந்தியாவட்டம் ரூ200, சின்னநந்திவட்டம் ரூ200 என விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: