வாக்கு எண்ணிக்கையில் பிற தாலுகாவினரை அமர்த்த முறையீடு: விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: வாக்கு எண்ணிக்கையில் பிற தாலுகாவினரை அமர்த்த கோரிய முறையீட்டை ஏற்க ஐகோர்ட் கிளை மறுத்தது. ஐகோர்ட் மதுரை கிளையில் தசரா விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் பி.வேல்முருகன், டி.தமிழ்செல்வி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது வக்கீல் ராஜா கார்த்திகேயன் ஆஜராகி, ‘‘ராமநாதபுரம் மாவட்ட பஞ்சாயத்து 7வது வார்டுக்கான இடைத்தேர்தல் நடந்தது. போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவயல் மற்றும் சேமனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களே வாக்குப் பதிவு அலுவலர்களாக பணியாற்றியுள்ளனர். இதனால், அங்கு முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

எனவே, வாக்கு எண்ணிக்கைக்கு பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த அரசு ஊழியர்களை ஈடுபடுத்தாமல் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களைக் ெகாண்டு நடத்த வேண்டும். அப்போது தான் நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடக்கும். எனவே, இதை வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் பாண்டியன் சார்பில் மனு செய்கிறோம். அதை உடனடியாக அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கிவிட்டது. தேர்தல் பணிகள் துவங்கிய பிறகு அதில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. தற்போது சூழல் மாறியுள்ளதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டியதில்லை’’ எனக்கூறி நிராகரித்தனர்.

Related Stories: