தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கலெக்டர் ஆபீஸ் 3வது மாடியிலிருந்து மாற்றுத்திறனாளி தற்கொலை மிரட்டல்

மதுரை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை கலெக்டர் அலுவலக 3வது மாடியில் இருந்து குதிக்க போவதாக மாற்றுத்திறனாளி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (24). கடந்த 2 ஆண்டுக்கு முன் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, மின்சாரம் தாக்கி 2 கைகளையும் இழந்தார். இதனால் சொந்த ஊர் திரும்பிய இவரிடம் ஆன்லைனில் பழகிய தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த பிரவீனா, வியாபாரத்திற்காக பணம் தரும்படியும், அதை இரட்டிப்பாக திருப்பி தருவதாகவும் கூறி ரூ.2.52 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ரூ.36 ஆயிரம் திரும்ப கொடுத்தவர், மீதி பணத்தை தரவில்லை என தெரிகிறது. இதுபற்றி கேட்டபோது, கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கடம்பூர் போலீசில் பிரவீனா புகார் செய்தார். போலீசார் ராம்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நேற்று ராம்குமார், மதுரை கலெக்டர் அலுவலக 3வது மாடிக்கு சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.

Related Stories: