பஞ்சாப் காங்கிரஸ் குழப்பத்துக்கு மத்தியில் சட்டீஸ்கரில் தலைமை மாற்றம்? முதல்வர் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்

புதுடெல்லி: சட்டீஸ்கர் முதல்வரின் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், டெல்லியில் முகாமிட்டுள்ளதால் மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் விவகாரங்களுக்கு மத்தியில், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் குழு டெல்லி வந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ, தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் ராமானுஜ்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ பிரிஹாஸ்பத் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இவர், முதல்வர் பூபேஷ் பாகலின் நெருங்கிய உதவியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், எம்எல்ஏ பிரிஹாஸ்பத் சிங் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் டெல்லி வந்துள்ளனர். இவர்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டீஸ்கர் பொறுப்பாளரான பி.எல்.புனியாவை இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘பஞ்சாப்பில் ஏற்பட்டதை போன்று சட்டீஸ்கரிலும் தலைமை மாற்றம் (முதல்வர்) குறித்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், முதல்வர் பூபேஷ் பாகலுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் டெல்லி வந்துள்ளனர். இருந்தும் ராகுல் காந்தி விரைவில் சட்டீஸ்கர் செல்ல உள்ளதால், அவரது பயணத் திட்டம் குறித்து ஆலோசிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டீஸ்கரில் தற்போதைக்கு தலைமை மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை’ என்றனர்.

இருப்பினும் சட்டீஸ்கர் பொறுப்பாளர் புனியாவிடம் கேட்ட போது, ‘லக்னோவில் உள்ளேன். டெல்லியில் முகாமிட்டுள்ள எம்எல்ஏக்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை; அதுகுறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை. நான் டெல்லி திரும்ப ஒருவாரம் ஆகும்’ என்றார். இதுகுறித்து முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில், ‘எல்லாவற்றையும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம்; நண்பர்களைச் சந்திக்கச் செல்லலாம். டெல்லி சென்றவர்கள், தங்களது தலைவர்களை சந்திக்க சென்றிருக்கலாம்’ என்றார். டெல்லியில் புனியா இல்லாத நிலையில், எதற்காக சட்டீஸ்கர் எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர்? என்று மாநில காங்கிரசில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: