உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் இன்னும் பல ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனத்தின் தென்-கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ராபால் சிங் கூறியதாவது: கொரோனா வைரஸ் இன்னும் மிக நீண்ட காலத்திற்கு பரவிக் கொண்டுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீண்ட காலத்தில் அது எப்போது எண்டமிக் கட்டத்தை எட்டும் என்பதை தீர்மானிக்க பல காரணங்கள் உள்ளன. எண்டமிக் கட்டம், அதாவது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தொற்றுதல் கட்டத்தை எட்டும். இது வைரசுடன் மக்கள் வாழ பழகிக் கொள்ளும் கட்டமாகும். முன்பு, ஏராளமான மக்கள் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசி மூலம் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாத, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மட்டுமே தற்போது பாதிக்கப்படுகின்றனர். எனவே, முந்தைய தொற்றாலும், தடுப்பூசியாலும் மக்களுக்கு கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமையே கொரோனாவின் எண்டமிக் கட்டத்தை தீர்மானிக்கும். எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் தற்போதைய நிலையில் அது அவசியமா என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை. இன்னும் உலகில் பல கோடி மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

201 நாட்களுக்குப் பிறகு 20,000க்கு கீழ் பாதிப்பு

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18,795 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 201 நாட்களுக்குப்பிறகு தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 581 ஆகும்.

* கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 373. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 206 ஆக சரிந்துள்ளது.

* இதுவரை 87 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>