வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி அடைந்துள்ளது!: விவசாய சங்கங்கள் அறிவிப்பு..!!

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10 மாதங்களை கடந்துள்ளது. இதனிடையே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிசான் மோர்ஷா அழைப்பு விடுத்த இந்த போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. போராட்டம் காரணமாக வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா, ஆந்திரா மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டம் பெரும் வெற்றி அடைந்ததாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஒன்றிய அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>