மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளர்கள் கனிமொழி ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.இதையடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இருவரும் கடந்த 21ம் தேதி வேட்புமனுவை, சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரும் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர். சுயேச்சை வேட்பாளர்களாக அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, கடந்த 23ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அப்போது, சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் மீது சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ்பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 3 மணி வரையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் இருவரும் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக வேட்பாளர்கள், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஆகியோரிடம் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சீனிவாசன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார். அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். இதன்மூலம், மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: