தமிழகத்தில் நில அபகரிப்பு நீதிமன்றம் செயல்படுகிறதா?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் முறையாக செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஆறு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நில மோசடிகளை தடுப்பதற்காக 2011ம் ஆண்டு அனைத்து மாவட்டத்திலும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவை மாநில அரசு ஏற்படுத்தியது. மேலும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 36 சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன.

இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நில அபகரிப்பு சிறப்புப் பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் விசாரணை நடத்த தடை இல்லை,’ என உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்தது.

இந்நிலையில், ஈரோடு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தொடர்ந்த நில மோசடி புகார் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, ஹெச்.ராய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘நில மோசடி தொடர்பான எனது புகாரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. மேலும், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் சரியாக செயல்படாமல் இருப்பதால் பல ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் எந்த நிவாரணமும் எனக்கு கிடைக்கவில்லை,’ என தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘2012ம் ஆண்டில் மனுதாரர் வைத்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. 2012ல் தொடரப்பட்ட வழக்கு இப்போது வரை நிலுவையில் இருப்பது ஏன்? தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறா? இல்லையா? இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், 6 வாரத்துக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்,’ என கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: