தலைமை நீதிபதி மீண்டும் வலியுறுத்தல்: காலத்துக்கு ஏற்றபடி சட்டங்கள் வேண்டும்

கட்டாக்: ‘‘தற்காலத்திற்கும், மக்களின் நடைமுறை யதார்த்தங்களுக்கு பொருந்தும் வகையிலும் சட்டங்களில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும்’’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தி உள்ளார். ஒடிசா சென்றுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கட்டாக்கில் அம்மாநில சட்ட சேவை ஆணையத்திற்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில், தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது: நமது சட்டங்கள், நடைமுறை யதார்த்தங்களுடன் பொருந்த வேண்டும். இதற்காக பழங்கால சட்டங்களை எளிமையாக்குவதன் மூலம் அரசு நிர்வாகிகள் இதனை சீர்த்திருத்த வேண்டும்.

இந்த விஷயத்தில் அரசியலமைப்பின் விருப்பங்களை நிறைவேற்ற அரசு நிர்வாகமும், நாடாளுமன்றம் இணைந்து கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் ஒரு சட்டத்தை உருவாக்கும் அதிகாரியாக நிர்பந்திக்கப்படாமல், சட்டங்களை பயன்படுத்துவது மற்றும் விளக்குவதை மட்டுமே கடமையாக கொண்டிருக்க முடியும். இந்திய நீதித்துறை முன்பாக உள்ள மற்றொரு சவால், சாமானியனின் நம்பிக்கையை பெறுவது.

நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆன பிறகும், பாரம்பரிய வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் மற்றும் விவசாய சமூகங்கள் இன்னமும் நீதிமன்றங்களை அணுக தயங்குகின்றனர். நீதிமன்றங்களின் நடைமுறைகள், செயல்பாடுகள், மொழி அவர்களை அந்நியப்படுத்துகிறது. எல்லாவற்றையும் மீறி மக்கள் தங்கள் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தாலும்கூட, அவை இன்னொரு வழக்காக தான் இங்கு எஞ்சியிருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: