2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி ஆசை

ஓமலூர்:  2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம், நடந்தது. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் பிரசாரம் செய்வது குறித்து இன்னும் திட்டமிடவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் போலியாக நகைகளை வைத்தும் வேறு வழிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக கூறுகிறார்கள். அங்கு தலைவர்களாக இருப்பவர்கள் யாரும் எந்த கட்சி சார்பிலும் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்கள் அல்ல. சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்கள். எனவே அவர்களை அதிமுகவினர் என்று கூற முடியாது. அங்கு முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. நான் முதல்வராக இருந்த போது கூட, இது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. எல்லா சங்கங்களிலும் முறைகேடுகள் நடக்கவில்லை. 2024ல் ஒரே நாடு, ஒரே  தேர்தல் என்ற இலக்கு உள்ளது. இதனால் அப்போது நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. எங்கள் அமைச்சர்கள்  ஊழல் செய்ததாக வதந்தி பரப்பப்படுகிறது. எங்கள் மடியில் கனமில்லை. எனவே வழியில் பயமில்லை.  வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories: