உலகம் முழுவதும் தீவிரவாதம் ஊக்கம் பெறும் ஆப்கான் நிலவரத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு: ஷாங்காய் மாநாட்டில் மோடி கவலை

புதுடெல்லி: `அதிகரித்து வரும் தீவிரவாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு சவால் விடுப்பதாக உள்ளது,’ என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் அடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெறுகிறது. சவுதி அரேபியா, ஈரான், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் இந்தாண்டு புதிய உறுப்பு நாடுகளாக இதில் இணைந்துள்ளன. இந்த மாநாட்டில் காணொலி மூலமாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களால் ஏற்படும் சவால்களை வெளிப்படையாக எடுத்து காட்டியுள்ளது. அங்கு நிலவும் சூழல் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதம் மற்றும் அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக பொதுவான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது, அதிகரித்து வரும் தீவிரவாதம் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

 இவையே பெரும்பாலான பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக உள்ளது. தீவிரவாதமயமாக்கலை எதிர்த்துப் போராடுவது பிராந்திய பாதுகாப்பு, பரஸ்பர நம்பிக்கைக்கு மட்டுமல்ல, நமது இளைய தலைமுறையினரின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அவசியம். மத்திய ஆசியா உடனான தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவின் பரந்து விரிந்த சந்தையுடன் இணைப்பதன் மூலம் மாபெரும் நன்மைகளை அடைய முடியும். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதன் அண்டை நாடான இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போவதால், உலகம் முழுவதும் தீவிரவாத, பயங்கரவாத கொள்கைகள் ஊக்கம் பெறும். இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகள் இடையே பிராந்திய கண்காணிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் தேவை.இவ்வாறு மோடி பேசினார்.

Related Stories:

>