நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு சிறையில் அடைத்துள்ள கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை (ஜெயராஜ்,  பென்னிக்ஸ்) போலீசார் கைது செய்து தாக்கியது, பின்னர், அவர்கள் சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தப்பட்ட பிரதான வழக்கு, மதுரை முதலாவது கூடுதல்  அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ், உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின்  நீதிமன்ற காவலை, நீதிபதிகள் முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தாமல்  நீட்டித்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ’ என கூறியுள்ளார்.

  நீதிபதிகள்  ஏ.எம்.கன்வீல்கர், ரவிக்குமார் அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு  வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘நாடு முழுவதும் தற்போது கொரோனா  அச்சுறுத்தல் உள்ளதால், முடிந்த வரையில் காணொலி மூலமாகவே விசாரணைகளை நடத்தலாம்  என ஏற்கனவே பொதுவான உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலி மூலமாக விசாரணைக்கு ஆஜர்படுத்தலாம். இது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த மனுதாரர் உட்பட அனைவருக்கும் பொருந்தும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: