விமானப்படைக்கு மேலும் பலம் சேர்க்க 24 பழைய மிராஜ்-2000 போர் விமானங்களை வாங்க முடிவு: கார்கில் உள்ளிட்ட தாக்குதலில் சூப்பர் செயல்பாடு

புதுடெல்லி: ஒன்றியத்தில் பாஜ அரசு பதவியேற்றதில் இருந்து ராணுவத்தை  தீவிரமாக பலப்படுத்தி வருகிறது. இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். மேலும், கடந்தாண்டு முதல் காஷ்மீரின் கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேச மாநில எல்லைகளை அபகரிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக, எல்லையில் படைகளை குவித்து மிரட்டி கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் முப்படைகளையும்  பல ஆயிரம் கோடி செலவில் ஒன்றிய அரசு தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல்களை வாங்கி குவித்து வருகிறது. பிரான்சிடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களையும் வாங்கி சேர்த்து வருகிறது. இதன்மூலம், முப்படைகளும் பலம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், விமானப்படைக்கு மேலும் பலம் சேர்ப்பதற்காக, ரபேல் போர் விமானங்களை தயாரித்து அளித்து வரும் பிரான்சின் டசால்ட் நிறுவனத்தின் மற்றொறு தயாரிப்பான, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட  24 பழைய ‘மிராஜ் 2000’ விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய விமானப்படையில் 50 மிராஜ்  விமானங்கள் இடம் பெற்றுள்ளன. கார்கில் போர், சமீபத்தில் நடத்தப்பட்ட பாலகோட் போன்றவற்றில் இதன் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தன. பாகிஸ்தானிடம் உள்ள எப்-16 போர் விமானத்தை விட இது வலிமை மிக்கது.

எனவே, ரூ.200 கோடி செலவில்  ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 24 விமானங்களை வாங்குகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை விமானப்படை ஏற்கனவே தொடங்கி விட்டது. இவற்றில் 8 போர் விமானங்கள் பறக்கும் நிலையில் பெறப்படும். மற்ற விமானங்களின் பாகங்கள் கப்பல் மூலமாக கன்டெய்னர்களில் பெறப்பட்டு, இந்தியாவில் இணைக்கப்படும் என்றும், அவற்றில் கூடுதல் நவீனமயங்கள் சேர்க்கப்படும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: