ஒன்றிய விஸ்டா திட்டம் பற்றி பொய் தகவல் பரப்புவோர் விரைவில் அம்பலமாவார்கள்: பிரமதர் மோடி ஆவேசம்

புதுடெல்லி: ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட ஒன்றிய விஸ்டா திட்டம் பற்றி பொய் பரப்புவோர்களின் எண்ணங்கள் விரைவில் அம்பலமாகும்,’ என்று பிரதமர் மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், ஒன்றிய அரசு அலுவலகங்கள் போன்றவை பழைய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இவற்றுக்காக ரூ.20 ஆயிரம் கோடியில், ‘ஒன்றிய விஸ்டா திட்டம்’ என்ற பெயரில் புதியதாக பிரமாண்ட கட்டிடங்களை ஒன்றிய அரசு கட்டி வருகிறது. இதில் ஒரு கட்டமாக, டெல்லியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மார்க், ஆப்ரிக்க அவின்யூ பகுதிகளில் பாதுகாப்புத் துறைக்காக புதிதாக 2 அலுவலக வளாகங்கள் கட்டுப்பட்டுள்ளன.  இந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து, மத்திய விஸ்டா இணையதளத்தையும்் தொடங்கி வைத்தார்.

இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ராணுவத் தளபதி ஜெனரல் நரவனே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரதமர் மோடி பேசியதாவது:தற்போது தொடங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக வளாகம் நவீன வசதிகள், சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. 24 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய இந்த கட்டடப் பணிகள் 12 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய விஸ்டா திட்டத்தை எதிர்ப்பவர்கள், ராணுவத்தினரின் நலன் கருதாதவர்கள். இத்திட்டம் குறித்து விமர்சிப்பவர்களின் தவறான எண்ணம் விரைவில் அம்பலமாகி விடும். புதிய நாடாளுமன்ற கட்டடம் திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்றார். ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், ‘‘ மறுசீரமைக்கப்பட்ட ஒன்றிய விஸ்டா அவின்யூ, 2022ம் ஆண்டு குடியரசு தினவிழா பேரணி நடத்துவதற்கு முன்பாக தயாராகி விடும்  என்றார்.

9.60 லட்சம் சதுரடியில் பிரமாண்டம்

* கஸ்தூரிபாய் காந்தி மார்க்கில் 4.52 லட்சம் சதுர அடிகளில் பிரமாண்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு பாதுகாப்பு துறையின் 14 அலுவலகங்கள் மாற்றப்பட உள்ளன.

* ஆப்ரிக்க அவென்யூவில் கட்டப்பட்டுள்ள 5.08 லட்சம் சதுரடி அலுவலகத்துக்கு 13 அலுவலகங்கள் மாற்றப்படுகின்றன.  

* புதிய பாதுகாப்பு அமைச்சக அலுவலக வளாகம் மொத்தமாக 9.60 லட்சம் சதுரடி பரபரப்பளவு கொண்டது.

* இவை நவீன வசதிகள், எரிசக்தி குறைவான தொழில்நுட்பம், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது.

* கட்டடத்தை கண்காணிக்க, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: