திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் உருவாக்கி உலக சாதனை

* 4 நிறுவனங்கள் அங்கீகார சான்று

* 40.69 கோடி லிட்டர் மழைநீரை ேசமிக்க வாய்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலத்தடிநீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1,121 பண்ணைக் குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை கலெக்டரிடம் வழங்கியது.திருவண்ணாமலை மாவட்டம், விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. பருவமழை கைவிடும் காலங்களில், சாகுபடி சரிந்து விவசாயிகள் துயரப்படுகின்றனர். மேலும், வறட்சி காலங்களில் குடிநீர் பற்றாக்குறை பாதிப்பும் ஏற்படுகிறது. பருவ மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான மெகா திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 541 கிராம ஊராட்சிகளில் 1,121 பண்ணைக் குளங்களை அமைக்க திட்டமிடப்பட்டது.மேலும், இயந்திரங்களை பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித உடல் உழைப்பின் மூலம் 30 நாட்களில் இந்த பண்ணைக் குளங்களை உருவாக்கி உலக சாதனையில் இடம் பெறும் பணிகள் தீவிரமாக நடந்தன. அதன்படி, ஒரு பண்ணைக் குளம் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ேதசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியில் இருந்து தலா ₹1.78 லட்சம் தினக்கூலியாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு பண்ணைக்குளமும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் எனும் அளவில் அமைக்கப்பட்டன.

பண்ணைக் குளம் அமைக்கும் பணியை கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆகியோர் தினமும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதோடு, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனித்தனி குழு அமைத்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. எனவே, திட்டமிட்டபடி 30 நாட்களில் 1,121 பண்ணைக்குளங்கள் அமைத்து முடிக்கப்பட்டது.ஒரு பண்ணைக்குளத்தில் 3 லட்சத்து 63 ஆயிரம் லிட்டர் மழைநீரை தேக்கி வைக்க முடியும். மேலும், விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில், அரசு நிதியில் இந்த பண்ணைக்குளங்கள் அமைத்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே ஒப்படைப்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், 40.69 கோடி லிட்டர் மழைநீரை தேக்கி வைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. அதனால், இனிவரும் மழை காலங்களில் பண்ணைக்குளங்கள் உடனடியாக நிரம்புவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குளங்களை, உலக சாதனையாக அங்கீகரிக்கும் நேரடி களஆய்வு கடந்த 3 நாட்களாக நடந்தது.

எலைட் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேயன் ஜவகர், அமீத் ஹிங்கரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் சார்பில் செந்தில்குமார், சிவக்குமரன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் சார்பில் ஜெகன்நாதன், கார்த்திக் கனகராஜூ, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பால்சுப்பிரமணியன் ஆகியோர் பண்ணைக்குளங்களை நேரில் பார்வையிட்டு உறுதிசெய்தனர்.அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 30 நாட்களில் 1,121 பண்ணைக்குளங்களை அமைத்து உலக சாதனை நிகழ்த்தியதை அங்கீகரித்து, எலைட் வேல்டு ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்காட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் சான்றிதழை கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆகியோரிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில், எஸ்பி பவன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவி தேஜா மற்றும் உலக சாதனையை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து, கலெக்டர் பா.முருகேஷ் கூறியதாவது:மழைநீர் சேமிப்பு திட்டங்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரின் வழிகாட்டுதல்படி, கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி, கடந்த 10ம் தேதி வரையிலான 30 நாட்களில் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் 1,121 பண்ணைக்குளங்கள் அமைத்து உலக சாதனை படைத்திருக்கிறோம். அதனை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 4 நிறுவனங்கள் அங்கீகரித்து சான்று வழங்கியிருக்கிறது. இந்த முயற்சியின் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.

Related Stories: