அகிலேசுடன் பாஜக எம்எல்ஏ சந்திப்பு: உத்தரபிரதேச அரசியலில் திடீர் பரபரப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த சீதாப்பூர் எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர், திடீரென சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்தார். இவரது சந்திப்பு உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், ‘100-க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் எங்கள் கட்சி தலைமையுடன் தொடர்பில் உள்ளனர்.

அவர்கள் எங்கள் கட்சித் தலைவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்’ என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீது எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர் பரபரப்பு குற்றச்சாட்டை தெறிக்கவிட்டார். அதாவது, ‘நாங்கள் அதிகம் பேசினால், தேசத்துரோக வழக்கு எங்கள் மீது போடப்படும். இதுதான் பாஜக எம்எல்ஏக்களின் நிலைமை. ஒரு எம்எல்ஏ என்ற முறையில், என்னால் என் தொகுதி மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அகிலேஷ் யாதவை ராகேஷ் ரத்தோர் சந்தித்தது குறித்து மாநில பாஜக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காது என்பதால், வேறு இடங்களை நோக்கி செல்கின்றனர். அவர்களில் ராகேஷ் ரத்தோரும் ஒருவர்’ என்றனர்.

Related Stories: