பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த பணத்தில் தீர்த்த நீதிபதி: கூடலூர் அருகே நெகிழ்ச்சி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தர்மகிரி. இந்த பகுதியை சேர்ந்தவர் ரீனா (50). விவசாயி. கணவரை இழந்த இவர் வங்கியில் ரூ.50 ஆயிரம் விவசாய கடன் வாங்கினார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சுமா (50) என்பவர் ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். சில தவணை செலுத்திய பின்னர் ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் வேலைக்கு செல்லமுடியவில்லை. கடன் தவணை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. இந்நிலையில் நேற்று கூடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் ரீனா மற்றும் அவருக்கு ஜாமீன் கொடுத்த சுமா ஆகியோர் வந்திருந்தனர். வங்கி சார்பாகவும் அதிகாரி வந்திருந்தார். இது குறித்து விசாரித்தபோது ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாக ரீனா கூறினார்.

வங்கி அதிகாரி ஒரே தவணையாக ரூ.20 ஆயிரம் செலுத்தினால் கடனில் இருந்து விடுவிப்பதாக கூறினார். ஜாமீன் அளித்த சுமாவும் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடசுப்ரமணி, அவர்களின் நிலைமையை விசாரித்து உண்மைதான் என்பதை தெரிந்து கொண்டார். பின்னர் நீதிபதி, வக்கீல்கள் ஆப்சல்ஜா, பிலிப்போஸ், வங்கி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக ரூ.10 ஆயிரம் செலுத்தினால்போதும் என்று முடிவு செய்யப்பட்டது. கடன் தொகையை நீதிபதி, வக்கீல்கள் சேர்ந்து ஏழை விவசாய பெண் வாங்கிய வங்கி கடனை தங்கள் சொந்த பணத்தில் செலுத்தி ரீனா மற்றும் சுமாவை விடுவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் நீதிபதி மற்றும் வக்கீல்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: