வாய்க்குள் வைத்து 1 கிலோ தங்கம் கடத்தல்: உஸ்பெகிஸ்தான் பலே ஆசாமிகள் கைது..!

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வாய்க்குள் வைத்து ரூ.1 ேகாடி மதிப்புள்ள 951 கிராம் தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததாக சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய இருவரையும் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து எந்த விதமான சட்டவிரோத பொருளும் சிக்கவில்லை. மேலும் பரிசோதனை செய்தபோது இருவரது வாய்க்குள் 951 கிராம் மதிப்புள்ள தங்கம் மற்றும் தங்க செயின் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து இருவரையும் கைது செய்து காவல் துறையினர் அவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து கடத்திய தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. 2 உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் சுங்க அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வாயின் உட்பகுதியில் மறைத்து சுமார் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பயணிகளை சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் தங்களது வாயின் உட்பகுதியில் பற்கள் மற்றும் செயின் வடிவில் 951 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: