வியாபாரிகள் வருகை குறைவு எதிரொலி: ஈரோடு மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு: ஈரோடு மாட்டு சந்தையில் வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் மாடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த மாட்டுசந்தை கடந்த 2 வாரங்களாக மீண்டும் செயல்பட்டு வருகின்றது. நேற்றைய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட சற்று அதிகம் என்றாலும், வியாபாரிகள் குறைந்த அளவே வந்ததால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. சந்தைக்கு 200 பசுமாடு,50 எருமை,50கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

வழக்கமாக ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொண்டு மாடுகளை வாங்கி செல்வார்கள். கொரோனா பீதி காரணமாக வியாபாரிகள் மிகவும் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டதால் விற்பனையில் பாதி அளவு தான் நடந்ததாகவும், விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று உள்ளூர் வியாபாரிகள் கூறினர்.

Related Stories: