கோகுல் ராஜ் கொலை விவகாரம் வழக்கை 3 மாதத்தில் முடிக்க கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அவகாசம்

புதுடெல்லி: கடந்த 2015ம் ஆண்டு நடந்த கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளிப் பாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த யுவராஜை, தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் யுவராஜுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, யுவராஜ் தரப்பில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ததோடு, வழக்கை 6 மாதத்தில் முடிக்கும்படி கடந்தாண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் தரப்பில் கடந்த மாதம் 28ம் தேதி கூடுதல் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வழக்கு விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கோகுல் ராஜ் கொலை வழக்கை விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உத்தரவிட்டனர்.

Related Stories: