இந்தியாவிலேயே தயாரான நிலக்கரியால் இயங்கும் இன்ஜினுடன் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மலை ரயில் சோதனை ஓட்டம்: குன்னூரில் வரவேற்பு

மேட்டுப்பாளையம்: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, நிலக்கரியால் இயங்கும் இன்ஜினுடன் ஊட்டி மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் 100 ஆண்டுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு நிலக்கரியால் இயங்கும் முதல் மலை ரயில் இன்ஜின் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் லாரியில் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, ராட்சத கிரேன்கள் மூலம் இருப்பு பாதையில் இறக்கி வைக்கப்பட்டது. இரு பெட்டிகளை மட்டும் இணைத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஹில்குரோவ் ரயில் நிலையம் வரை 13 கி.மீ. வேகத்தில் நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மலைப்பாதையில் எவ்வித தடையுமின்றி புதிய இன்ஜினுடன் மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. அங்கு இன்ஜின் டிரைவர்களுக்கு ரயில்வே ஊழியர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர். \”வேறு குறைகள் இருந்தால் நீக்கப்பட்டு இன்னும் 20 நாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: