கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் கொசஸ்தலை ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

பள்ளிப்பட்டு: ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர பகுதியில் தொடர் மழை காரணமாக சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றை கடந்த வெள்ளப்பெருக்கால் கரையின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

குறிப்பாக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரை பாலங்கள் அனைத்தும் மூழ்கி காணப்படுகிறது. இதனால், கரையோரம் அமைந்துள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சொரக்காய்பேட்டை - நெடியம்  தரை பாலத்தின் மீது வெள்ள நீர் கரைபுரண்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும், அங்குள்ள தடுப்பணை நிரம்பி வெள்ளம் ஆற்றில் பாய்ந்து செல்கிறது. கிராமமக்கள் வெள்ளப்பெருக்கை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். பள்ளிப்பட்டு வழியாக நகரி ஆறு கடந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு வெள்ளப்பெருக்கு வேகமாக சென்று கொண்டிருப்பதால் ஓரிரு நாளில் பூண்டி ஏரி சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சரவணன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கரையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும் விவசாயத்திற்கும் தேவையான நீர் சேமிக்கப்படும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பணை நிரம்பி வெள்ளம் ஆற்றில் பாய்ந்து செல்கிறது. கிராமமக்கள் வெள்ளப்பெருக்கை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Related Stories: