ஆப்கன் விவகாரம், சீன அச்சுறுத்தல் இருப்பதால் காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்: பாஜ மாநில துணைத்தலைவர் பேட்டி

சேலம்: ஆப்கன் விவகாரம், சீனா அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் இருப்பதால், காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

சேலம் மாநகர் மாவட்ட பாஜ சார்பில், கருங்கல்பட்டியில் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பது தான், தமிழக பாஜவின் எண்ணம். இதை தேசிய தலைமைக்கு, மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விலையேற்றத்தை பிரதமர் மோடியும், மத்திய அரசும் எதற்காக மேற்கொண்டுள்ளார்கள் என்றால், நாட்டின் சூழலை பார்க்க வேண்டும். ஆப்கன் விவகாரம், சீனா அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, சிலிண்டர் விலை உயர்வை மேற்கொண்டது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். இதனை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கையில் வைத்திருந்து என்ன பயன். அதனை தனியாருக்கு விடுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தடையை மீறி நடத்துவோம். அதற்காக எத்தகையை வழக்கையும் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: