காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்: இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்த உள்ளன ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1281 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 6,81,731 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,31,266 பெண்கள் 3,50,387, திருநங்கைகள் 78 பேர் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ராகுல்நாத், வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் பெற்றுக்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், 359 கிராம ஊராட்சிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2034 வாக்குச்சாவடிகள் அமைத்து, வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 11,54,933 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 5,69,583, பெண்கள் 5,85,163, 187 பேர் ஆகும். 2034 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 16,208 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு அலுவலரிடம் பெறப்பட்டு, ஊரக உள்ளாட்சி தேர்தலுகளுக்கான வாக்காளர் பட்டியலுக்கு துணை பட்டியல்கள் வெளியிடப்படும் கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எஸ்பி விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) எம்.ஆனந்தன், (ஊராட்சி) .ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தண்டபாணி உள்படபலர் கலந்து கொண்டனர்.

வாக்காளர்கள் விவரம் வருமாறு.

ஒன்றியம்    ஆண்    பெண்    இதர

காஞ்சிபுரம்    51,127    54,705    12

வாலாஜாபாத்    50,710    54,831    7

உத்தரமேரூர்    50,993    53,423    7

ஸ்ரீபெரும்புதூர்    44,387    48,964    11

குன்றத்தூர்    1,34,049    1,38,464    41

Related Stories: