வேலை வாங்கித் தருவதாகக்கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா 76.50 லட்சம் மோசடி: போலீசில் உறவினர் புகார்

ராசிபுரம்: வேலை வாங்கித் தருவதாக கூறி 76.50 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உறவினரே புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில், புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில், ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மதிவேந்தனிடம் தோல்வியடைந்தார். அமைச்சராக இருந்த போதே, டாக்டர் சரோஜா மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், அவரது உறவினரான கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற குணசீலன் (64) என்பவர், வேலை வாங்கித் தருவதாக கூறி டாக்டர் சரோஜா 76.50 லட்சம் மோசடி செய்து விட்டதாக ராசிபுரம் காவல்நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். குணசீலன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பத்திர எழுத்தராக உள்ளேன். அமைச்சராக இருந்தபோது, டாக்டர் சரோஜா எங்களை அழைத்து, சத்துணவு திட்டத்தில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், பணம் கொடுப்பவர்களை வேலையில் சேர்த்து விடுவதாகவும் கூறினார். இதனை நம்பி நானும், எனது மனைவியும் 15 பேரிடம் 76.50 லட்சம் வசூலித்தோம். முதல் தவணையாக 50 லட்சத்தை எனது வீட்டில் வைத்து, அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன்.

அப்போது, அவரது கணவர் டாக்டர் லோகரஞ்சன் உடனிருந்தார். அந்த பணத்தை கொண்டு தான், தற்போது ராசிபுரத்தில் உள்ள வீட்டை கிரயம் செய்தனர்.  அதற்கு பின்பு 26.50 லட்சத்தை டாக்டர் லோகரஞ்சனிடம் கொடுத்தேன். அப்போது, டாக்டர் சரோஜா உடனிருந்தார். ஆனால், கூறியபடி வேலை வாங்கி கொடுக்காததால், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனது நிலையை விளக்கி கூறிய போது, நாங்கள் அமைச்சரிடம் கொடுக்கவில்லை. உங்களிடம் தான் கொடுத்தோம். எனவே, பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்ேபாம் என சிலர் மிரட்டுகிறார்கள். எனவே, எனக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு குணசீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் தெரிவித்துள்ள குணசீலன், டாக்டர் சரோஜாவின் அண்ணனுடைய மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஜி முதல்வரின் பிஏ நண்பர் எனக்கூறி வேலை வாங்கி தருவதாக 5.40 லட்சம் மோசடி புகார்

ஈரோடு: ஈரோடு சூளையை சேர்ந்த டாஸ்மாக் தற்காலிக ஊழியர் ரகுபதி (36), ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: சாமிநாதன் என்பவர், தனக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் இளங்கோ நெருங்கிய நண்பர், அவரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வழங்ககோரி கடந்த 2020 பிப்ரவரி முதல் டிசம்பர் வரை சாமிநாதன், அவரது மனைவி வெண்ணிலா ஆகியோரின் வங்கி கணக்கில் கொஞ்சம், கொஞ்சமாக ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தினேன். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை.

தற்போது பணத்தை கேட்டால், ஆட்களை வைத்து கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார். என்னை போல் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். சாமிநாதன் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Related Stories: