கொடநாடு கொலை வழக்கு ஊட்டி கோர்ட்டில் சயான் ஆஜர்: செப். 2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஊட்டி: பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கிடையே கொடநாடு கொலை வழக்கு நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காரசார விவாதங்களுக்கு பின்னர் வரும் 2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை  முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்தில், கடந்த 13ம் தேதி அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல்கள் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயானும் தன்னை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து. சயானிடம் கடந்த 17ம் தேதி ஊட்டியில் நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இந்த விசாரணையில் பல்வேறு புதிய தகவல்களும், அதிமுகவில் உள்ள முக்கிய விஐபிகள் பெயரையும் சயான் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்தது.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சயானின் மறு வாக்குமூலத்திற்கு பின் இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததால் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவியது. நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணை துவங்கியது. விசாரணை துவங்கியவுடன், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர், ‘‘நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்துள்ள கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தடவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர் ஆகிேயாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என கேட்டுக் கொண்டனர்.

அப்போது, 35வது சாட்சியான அனுபவ் ரவி தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தகிருஷ்ணன், ‘‘இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளதால், தொடர் விசாரணை மேற்கொள்ளக் கூடாது’’ என மனு அளித்தார். அப்போது, அரசு வக்கீல்கள் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரையும் நீதிபதி சஞ்சய்பாபா சமாதானம் செய்து வைத்தார். அவர் கூறுகையில், ‘‘இவ்வழக்கை இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இரு தரப்பினரும் சமாதானமாகவும், சாமர்த்தியமாகவும் வழக்கை கையாள வேண்டும். நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வழக்கு விசாரணை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் சாட்சிகள் நடராஜ், தடவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின் வாரிய உதவி பொறியாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

வழக்கு விசாரணை ஒத்திவைத்த பின், சயான் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

சயானிடம் மறு வாக்குமூலம் பெற்ற பின் நேற்று இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், சயானிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போலீசார் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.  தாமதப்படுத்த முயற்சி: குற்றவாளிகள்  தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை வழக்கில்  முக்கிய சாட்சிகளில் ஒருவரான அனுபவ் ரவிக்கு பின், அரசியல் தலையீடு உள்ளது.  இவ்வழக்கை தாமதப்படுத்தவும், மேல் முறையீடு செய்யப்படாமல்  இருப்பதற்காகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இவர் அரசியல் உள் நோக்கத்துடனேயே மனு அளித்துள்ளார்’’ என்றார்.

செல்போனை கேட்டு போலீசிடம் சயான் வாக்குவாதம்

கொடநாடு  கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் இருக்க  சயானிடம் இருந்து இதுவரை 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஆனால்,  இந்த செல்போன்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. சயானிடமும்  வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. நேற்று விசாரணைக்கு வந்த சயான், காவல்துறை  அதிகாரிகளிடம், ‘‘‘‘எனது செல்போன்களை என்ன செய்தீர்கள்? நீதிமன்றத்திலும்  ஒப்படைக்கவில்லை. என்னிடமும் வழங்கவில்லை’’’’ என கேட்டு வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். ‘‘வரும் 2ம் தேதிக்குள் தரவில்லை எனில், நீதிமன்றத்தில்  முறையிடுவேன்’’ என்றார். சயானின் செல்போன்களை போலீசார் நீதிமன்றத்தில்  ஒப்படைக்காத நிலையில், அவர் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவல்கள் கசிய  வாய்ப்புள்ளது. இதனால், போலீசார் இந்த செல்போன்களை அவரிடமோ அல்லது  நீதிமன்றத்திலோ ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வரலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: