வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் சட்டப்பேரவையில் கொடநாடு பற்றி விவாதிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கொடநாடு தொடர்பாக ஊடகத்தில் சில கருத்துகளை பேசியுள்ளார்.

சட்டமன்ற பேரவை விதி 55ன் கீழ் கொடநாடு விவகாரம் குறித்து அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். கொடநாடு குறித்து சட்டப்பேரவையில் பேச கேட்பது மரபு இல்லை. எனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதித்தது இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் கொடநாடு குறித்து சட்டமன்றத்தில் பேச முற்பட்டது அவரது உரிமை. எதிர்க்கட்சி தலைவரை முடக்கம் செய்து பேசவிடாமல் மனரீதியான துன்புறுத்தல் அளித்து, சுதந்திரமாக கருத்து சொல்லவிடவில்லை. அதனால்தான் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. எங்களுக்கு மடியில் கனம் இல்லை, அதனால் எங்களுக்கு வழியில் பயம் இல்லை. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக மறு விசாரணைக்கு எந்தவொரு நீதிமன்றத்திலும் அனுமதி வாங்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இல்லை என்றால் அதுகுறித்து விவாதிக்க தயார். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுபோல செல்வப்பெருந்தகை மீதுள்ள வழக்குகளை சட்டமன்றத்தில் பேசலாமா என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: