அம்பை அருகே 40 ஆண்டுகளாக தொடரும் அவலம் பழமைவாய்ந்த பிரம்மதேசம் சிவன் கோயிலில் புதர்மண்டியும், சிதிலமடைந்தும் கிடக்கும் தேர்: விரைவில் சீரமைத்து தேரோட்டம் நடத்தப்படுமா?

அம்பை: அம்பை  அருகே முறையாக பராமரிக்கப்படாத பிரம்மதேசம் கைலாச நாதர் கோயில் தேர் 40 ஆண்டுகளாக ஓடாத நிலையில் சிதிலமடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் வேதனைபடும் பக்தர்கள், தேரை விரைவில் சீரமைத்து  தேரோட்டம் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். அம்பையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலான பிரம்மதேசம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுயம்பு வடிவில் தோன்றிய மூலவர் கைலாசநாதரை பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் பூஜை செய்ததால் பிரம்மதேசம் என இக்கிராமத்திற்கு பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.  மேலும் இக்கோயில் தென் தமிழக நவக்கிரக தலங்களில் ஆதி கைலாயங்களில் முதன்மையானதாகவும், தென் மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் திகழ்கிறது. மேலும்   இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னதி உள்ளது தனிச்சிறப்பு. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுவது கோயிலை வலம் வந்து வணங்குவது போல் உள்ளது.  சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோச நாட்களில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

 இத்தகைய பெருமையுடன் புண்ணியத்தலமாக வணங்கப்படும் இக்கோயில் தற்போது தனது எழிலை இழந்து வருவது பக்தர்களிடமும், சுற்று வட்டார மக்களிடமும் வேதனை அளிக்கிறது. முறையான பராமரிப்பின்றி இக்கோயில்  கோபுரத்தில் செடிகள் புதர்கள் போல் வளர்ந்துள்ளன.  கோபுரத்தில் உள்ள கல் சிற்பம் உடைந்து காணப்படுகிறது. கோயில் அருகே பிரம்மதீர்த்த குளம் சுத்தமின்றி காணப்படுகிறது. கடைசியாக  கடந்த 1978ம் ஆண்டு இக்கோயிலில் தேரோட்டம் நடந்தது. அதற்கு பிறகு  தேரோட்டம் நடைபெறவில்லை. அத்துடன் மருந்துக்குக்கூட பராமரிக்கப்படாத தேர் முழுவதுமாக சிதிலமடைந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  ஆண்டாண்டு காலமாக இக்கோயில் நிலங்கள், கட்டிடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருபவர்களிடம் இருந்து மீட்டெடுத்து  கோயிலை புனரமைப்பு செய்யவும், சிதிலமடைந்த நிலையில் ஓடாமல் நிற்கும் தேரை விரைவில் சீரமைத்து தேரோட்டம் நடத்தவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்களும், பொதுமக்களும் இருந்து வருகின்றனர்.

Related Stories: