அதிமுக ஆட்சி மறந்த வடகாடு பரப்பலாறு அணையை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வனப் பகுதிக்குச் சொந்தமான வடகாடு மலைப் பகுதியில் 90 அடி உயரமுள்ள பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 197.95 மில்லியன் கன அடியாகும். பரப்பலாறு அணையின் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

மேலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. கடந்த 2014-2015 அதிமுக ஆட்சியில் பரப்பலாறு அணை ரூ.19.50 கோடி செலவில் தூர்வாரப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அறிவித்ததை அவர்கள் மறந்து விட்டதால், அணை தூர்வாரப்படாமல் கிடந்தது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பரப்பலாறு அணை தூர்வாரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி எடுத்த தீவிர முயற்சியின் பேரில்,

கடந்த ஜூன் 29ம் தேதி கலெக்டர் விசாகன் அணையை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்ததன் பேரில், தமிழக அரசு ரூ.40 லட்சம் செலவில் பரப்பலாறு அணையை தூர்வாரி, அணையில் படிந்துள்ள வண்டல் மண்களை விவசாயிகளுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சிவக்குமார் கூறியதாவது, ‘ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை கட்டப்பட்டதிலிருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல், அணையில் வண்டல் மண் அதிகளவில் சேர்ந்து தண்ணீர் ேதங்க முடியாமல் இருந்தது.

இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் இந்த அணையை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.

Related Stories: