பொதுமக்கள் தெரிவித்த தேவைகளின் அடிப்படையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்: பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அமைச்சர்களிடம் கோரிக்கை

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் வளர்ச்சிக்காக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சட்டபேரவையில் பேசியதாவது: 100 நாட்களாக எனது தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம். தொகுதி மக்களின் கருத்துக்களை அறிந்தோம். அதன் அடிப்படையில் தொகுதியில் உள்ள பிரதான கோரிக்கைகள் ஒரு சிலவற்றை முன் வைக்கிறேன். எனது தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு, காக்ஸ் காலனி, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய நான்கு குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் பழமையானதாகிவிட்ட காரணத்தால், அவற்றிற்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். தற்போது, நான்கு இடங்களிலும் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், இந்த நான்கு குடிசை மாற்று குடியிருப்பு வீடுகளுக்கும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வரின் பெயர்களை சூட்ட வேண்டும் என்றும், மேலும், நம்முடைய இந்த நான்கு தலைவர்களின் பொதுவாழ்வை விளக்கும் வண்ணம் அந்த குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தொகுதியில் மாட்டாங்குப்பம் பகுதியில் சில மின் மீட்டர்களில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பை பெற்று அதிக மின்சார கட்டணம் செலுத்தி வந்தனர். இதை மின்சாரத் துறை அமைச்சர் கவனத்துக்கு எடுத்து சென்று, மேற்சொன்ன வீடுகளுக்கு தனித்தனி மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எங்கள் தொகுதியில் அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பெண்களுக்காக, பெண்களே இயக்கும் பிரத்யேக கூட்டுறவு கடன் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஆசியாவிலேயே மிக நீளமான மெரினா கடற்கரையின் ஒரு பகுதி எனது தொகுதியில் உள்ளது. சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தி மேலும் அழகுபடுத்த வேண்டும்.

எங்கள் தொகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சென்னை பள்ளிகள், அரசு பள்ளிகள் பல உள்ளன. அவற்றில் பல பள்ளிகளின் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளன. அவற்றை சீரமைத்து தருமாறு அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன். கழிவு நீர் குழாய்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டவை. அதனால் அடிக்கடி, கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இப்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அவற்றை மாற்றித் தர நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: