மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்றிரவு சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று முன்தினம் பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு கோயில் வளாகத்தில் வளையல் விற்ற லீலை நடந்தது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் பக்தர்களின்றி நடந்தது. முன்னதாக காலை கோயில் ஆடி வீதியில் தங்கப்பல்லக்கில் சுவாமி, அம்மன் வலம் வந்தனர்.

 மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை மீனாட்சி ஆட்சியும், ஆவணி 1 (நேற்று) முதல் பங்குனி வரை சுவாமி சுந்தரேஸ்வரர் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம். அதன்படி  சுந்தரேஸ்வரர் ஆட்சி பொறுப்பை நேற்று ஏற்றுக் கொண்டார். மீனாட்சி அம்மனிடம் இருந்து கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலைப் பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரர் திருக்கரத்தில் சேர்ப்பித்தார். மீனாட்சி கோயிலில் நேற்று காலை நடந்த ஆவணி மூலத்திருவிழாவின் பத்து திருவிளையாடல்களில் ஒன்றாக சுந்தரேஸ்வரர் வளையல் விற்ற லீலை திருவிளையாடல் நடந்தது.

மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறுகையில், ‘‘தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என தாருகாவனத்து ரிஷிகள் செருக்குடன் இருந்தனர். இதனை அடக்க எண்ணிய சிவபெருமான், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். பிச்சையிட வந்த அத்தனை ரிஷி பத்தினிகளும் அவரது அழகில் மயங்கி ஆடைகள், அணிகலன்கள் நெகிழ்ந்திட நின்றனர். இதுகண்டு ஆத்திரமுற்ற ரிஷிகள் மதுரையில் சாதாரண வணிகர் குலத்தில் பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறுணர்ந்த பத்தினிகளுக்கு இறைவனே வந்து உங்கள் கைகளில் வளையல் சூடுவார். அப்போது சாபம் தீரும் என்றுரைத்தனர். அவ்வாறே மதுரையில் பிறந்து வளர்ந்திட்ட இப்பெண்களுக்கு, இறைவன் வளையல் வியாபாரியாக அத்தெருவில் வந்து, பெண்களின் கரங்கள் தொட்டு வளையல் அணிவித்திட, சாபம் தீர்ந்து அப்பெண்கள் சிவலோகம் சென்றனர். இத்திருவிளையாடலே நிகழ்த்திக் காட்டப்படுகிறது’’ என்றனர்.

மீனாட்சி கோயிலுக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை மீனாட்சி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அறிக்கை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழாவின் 9ம் நாள் திருநாளாக நாளை(ஆக.19) புட்டு உற்சவம் நடக்கிறது. காலை 8 மணிக்கு சுவாமி கோயில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு செய்யப்பட்டு, நான்கு ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெற்று, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். பிட்டுக்கு மண் சுமந்த லீலை பகல் 1.05 மணி முதல் 1.29 மணிக்குள் நடைபெறும். ஆக.19ல் கோயில் பாரம்பரிய பழக்க வழக்கப்படி முற்பகல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. ஆக.19 மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவுப்படி கொரோனா கட்டுப்பாடு எதிரொலியாக ஆக.20, 21 மற்றும் ஆக.22 ஆகிய 3 நாட்களும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவித்துள்ளார். மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை மீனாட்சி ஆட்சியும், ஆவணி 1 (நேற்று) முதல் பங்குனி வரை சுவாமி சுந்தரேஸ்வரர் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம்.

Related Stories: