ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி எனக்கூறி 500 பெண்களிடம் மோசடி: ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

ஈரோடு: ஒரு  லட்சம் ரூபாய் செலுத்தினால் ரூ.1 கோடி கிடைக்கும் என்று கூறி ஈரோட்டில் 500க்கு மேற்பட்ட பெண்களிடம் பல கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம், கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் அன்னபூரணி (45). இவர் சோலார் பகுதியில் தறிப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் கிளையானது ஈரோடு சோலார் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இதன் மேலாளராக செயல்பட்டவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பெண்களிடம் தங்களது நிறுவனத்தின் மூலம் இடி தாக்கிய பழமையான கலசத்தை (இரிடியம் கலசம்) வாங்கி வெளிநாட்டிற்கு விற்ற வகையில் ரூ. 2 லட்சம் கோடி வரை பணம் வர வேண்டி உள்ளதாகவும், இந்த பணத்தை தனி நபருக்கு தராமல் அறக்கட்டளைக்கு மட்டுமே தர இருப்பதாகவும், எனவே இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக சேரும் பெண்கள் தங்கள் பங்காக ஒரு லட்சம் முதலீடு செய்தால்  ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் கூறினார்.  

இதை நம்பிய ஏராளமான பெண்களிடம் இருந்து அவர் பணம் வசூல் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நான் மட்டும் சுமார் ரூ.10 லட்சம்  கொடுத்துள்ளேன். ஈரோட்டில் மட்டும் 517 பேரிடம் இதேபோல பல கோடி ரூபாய் வரை  பெற்று மோசடி செய்துள்ளனர். மேலும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும்  கிளைகள் அமைத்து இரிடியம் விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டு  வருகின்றனர். இவர்கள் போலியான மத்திய, மாநில அரசு, ரிசர்வ் வங்கி  முத்திரைகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இக்கும்பல்  மீது நடவடிக்கை எடுப்பதோடு ஏமாற்றி பெற்ற பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: