வைகை அணை பூங்காவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள்-தொற்று பரவும் அபாயம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா காரணமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வைகை அணை பூங்கா மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுப்பாட்டை மீறி சுற்றுலாப் பயணிகள் நுழைய அனுமதி அளித்து வருகின்றனர். இதில் வைகை அணை வலது கரை பூங்கா நுழைவு வாயில் வழியாக நேற்று வெளிமாவட்டங்களில் இருந்து, வந்த சுற்றுலா பயணிகளை அங்கிருந்த பொதுப்பணித்துறை ஊழியர் பூங்காவில் நுழைவதற்கான அனுமதி கட்டணம் பெற்றுக்கொண்டு  அனுமதித்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூங்காவில் ஆங்காங்கே குவிந்த நிலையில் காணப்பட்டனர். இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், சுற்றுலா தலங்களுக்கு கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், வைகை அணை பூங்கா பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருவது தொடர் கதையாக உள்ளது. இதுபோல அரசு அதிகாரிகளின் குடும்பத்தார் கட்டுப்பாடுகளை மீறி வைகை அணை பூங்காவில் சுற்றிப்பார்ப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில்,  சுற்றுலா பயணிகளை கூட்டம் கூட்டமாக  கட்டுப்பாடுகளை மீறி அனுமதிப்பது நோய்த்தொற்று  மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே வைகை அணை பூங்கா பகுதியில்  கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: