ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில் சோதனை முறையில் 7 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆதார் பயோமெட்ரிக் முறையில் பத்திரங்கள் பதிவு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் சோதனை முறையில் 7 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பொதுமக்கள் சொத்துக்களை வாங்குதல், விற்பனை செய்தல், விற்பனை ஒப்பந்தம், அடமானம், குத்தகை, குடும்ப செட்டில்மென்ட், உயில் போன்றவற்றை பதிவு செய்ய தினந்தோறும் வருகை தருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டில் பதிவுத்துறை முழுவதுமாக ஆன்லைன் மயமாக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களை படம் எடுத்தல், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பெறுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆன்லைன் முறையிலும் இவை சேர்க்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், ஆள் மாறாட்டங்களை அடியோடு ஒழிக்க முடியவில்லை. இந்நிலையில், ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் காண புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு கணினிக்கு ஒரு விரல் ரேகை இயந்திரமும், ஒரு அலுவலகத்திற்கு ஒரு கரு விழிப்படல கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் காணும் நடைமுறை ராஜபாளையம் மற்றும் இணை சார்பதிவாளர் (மத்திய சென்னை) அலுவலகத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த நடைமுறையை கோவை மண்டலத்தில் பீளமேடு சார் பதிவாளர், சேலம் மண்டலத்தில் தாதகாபட்டி சார் பதிவாளர், தஞ்சாவூர் மண்டலத்தில் மகர்நோம்புச்சாவடி, திருநெல்வேலி மண்டலத்தில் இணை சார்பதிவகம், வேலூர் மண்டலத்தில் பள்ளிகொண்டா சார்பதிவாளர், கடலூர் மண்டலத்தில் வேப்பூர் சார்பதிவாளர், திருச்சி மண்டலத்தில் முசிறி சார்பதிவாளர் ஆகிய அலுவலகங்களில் இந்த புதிய நடைமுறை கடந்த 2ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆள்மாறாட்டம் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையைக் கொண்டு பயோமெட்ரிக் முறையில் இந்த 7 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. பள்ளிகொண்டா சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் 25 முதல் 30 பத்திரங்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வயதானவர்கள் கைரேகை பதிவு செய்ய முடியாவிட்டால், அவர்களின் கண்ரேகை வைத்து பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறையால், சாட்சி அளிப்பவர்கள் வரவேண்டியதில்லை. நிலத்தை விற்பவரும், வாங்குபவரும் இருந்தால் போதும். இதன்மூலம் பத்திரப்பதிவை காலதாமதமின்றி விரைவாக முடிக்க முடியும். இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது’’ என்றனர்.

Related Stories: