பொன்னை அருகே ஒரே நாளில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பொன்னை: பொன்னை அருகே ஒரே நாளில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டரால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்ய நேற்று  காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வந்திருந்தார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, மாற்றுத்திறனாளியான இவர் தனது மனைவி லட்சுமியுடன் பழுதடைந்த 3 சக்கர சைக்கிளில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே வந்தபோது, கலெக்டர் தனது காரில் கொள்முதல் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

இதைப்பார்த்த தட்சிணாமூர்த்தி கலெக்டரை பார்த்து கையசைத்தார். இதை கவணித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு, காரில் இருந்து கீழே இறங்கி தட்சிணாமூர்த்தியிடம் வந்தார். அப்போது அவர் தனது 3 சக்கர சைக்கிள் பழுதடைந்துவிட்டது. இதனை சீரமைக்க தனக்கு போதிய வருமானம் இல்லாததால், அதில் செல்ல சிரமாக உள்ளது. ஆகையால் எனக்கு புது 3 சக்கர சைக்கிள் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். இதைக்கேட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  

இதையடுத்து தனது செல்போன் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அலுவலரை தொடர்பு கொண்டு, தட்சிணாமூர்த்திக்கு புதிய 3 சக்கர சைக்கிள் வழங்க உத்தரவிட்டார். பின்னர், நலவாரிய அதிகாரிகள் நேற்று மாலை தட்சிணாமூர்த்தி தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவருக்கு புதிய 3 சக்கர சைக்கிள் வழங்கினர். காலையில் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து மாலையில் நிறைவேற்றிய கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தனக்கு கிடைத்த 3 சக்கர சைக்கிளால் தட்சிணாமூர்த்தி, அவரது மனைவி லட்சுமி மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: