மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது!: மத்திய அரசின் பதிலால் அதிர்ச்சி..!!

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சமூக ஆர்வலர் சார்பில் தாக்கல் செய்துள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கேள்விக்கு திருத்தப்பட்ட இலக்கிற்கான நிறைவு  இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று பதில் அளித்துள்ளது. திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்ய டெண்டர் விடப்பட்டிருக்கிறது என்று பதிலளித்துள்ள சுகாதாரத்துறை, விரிவான மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் என கேட்கப்பட்ட கேள்விக்கும் மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்கவில்லை. மதுரை மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கைக்கான முன்மொழிவு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அடிக்கல் நாட்டி 31 மாதங்கள் கடந்து விட்டது. இருப்பினும் நிதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்ததால் சுற்றுச்சுவருடன் கட்டுமானப்பணி நின்று போனது. இதற்கிடையே புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடி எனவும், அதில் ரூ.1627.70 கோடி ஜப்பானின் ஜெய்கா நிறுவன கடன் வாயிலாகவும், மீதி தொகை பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுபோல், முதலீட்டுக்கு முந்தைய பணிகள் எய்ம்ஸ் அமைவிடத்தில் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் கேட்டிருந்தார். அதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என தெரியாது என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories: