மும்பை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘அதானி ஏர்போர்ட்’ பெயர் பலகையை நொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்: சத்ரபதி சிவாஜி பெயரை மாற்றக்கூடாது என ஆவேசம்

மும்பை:  ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டின் பெரும்பாலான பெரிய திட்டங்கள் அம்பானி, அதானியிடம்தான் ஒப்படைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இதற்கேற்ப, பல்வேறு விமான நிலையங்களை இயக்கும் பொறுப்பும் அதானி குழுமத்துக்குதான் சென்றுள்ளது.  கடந்த ஜூலையில் இந்த நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் மும்பை சர்வதேச விமான நிலையம் முழுமையாக வந்து விட்டது.  மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் அதானி ஏர்போர்ட் என்ற பெயர் பலகையை அதானி குழுமம் நிறுவியது. இது, சிவசேனா கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தின் முன்பு சிவசேனா தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று குவிந்தனர். விமான நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என கூறிய அவர்கள், அதானி பெயர் பலகையை அடித்து நொறுக்கி ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.  இவ்வாறு பெயர்ப்பலகையை வைப்பது, சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயரை அழிப்பதற்கு ஒப்பானதாகும் என அவர்கள் ஆவேசத்துடன் கூறினர்.

ஒப்பந்த விதி மீறல்

அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலையங்களையும் அதானி குழுமம் கடந்த ஆண்டு கட்டுப்பாட்டில் எடுத்தது. இதன்பிறகு இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூன்று குழுக்கள் ஆய்வு செய்ததில், அதானி குழுமம் மேற்கண்ட விமான நிலையங்களில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி செயல்படாமல், பிராண்டிங் விதி மீறி பெயர் பலகை வைத்தது தெரியவந்தது எனவும், கடந்த ஜூன் 29ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் பெயர் பலகையை மாற்றி முடித்து விட்டது எனவும், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களில் பெயர் மாற்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்கண்ட குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் லோகோ பிரதானமாக காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் அந்த குழு சுட்டிக்காட்டியிருந்தது.

Related Stories: