கலாமை பற்றி 3 மணி நேரத்தில் 100 கவிதைகள் எழுதி சாதனை: திண்டுக்கல் மலைக்கிராம இளைஞர் அசத்தல்

திண்டுக்கல்: அப்துல் கலாமை பற்றி 3 மணி நேரத்தில் 100 கவிதைகளை எழுதி திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஆடலூர் அருகே சோலைக்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (24). எம்ஏ பொருளியல் முடித்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினமான அக்.10ல் பிறந்த இவருக்கு சிறு வயது முதலே அப்துல் கலாம் மீது பற்றுதல் இருந்து வந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அப்துல் கலாம் குறித்து பேசியதுடன், அவரது கனவை நனவாக்கும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

இதை பார்த்த சென்னையில் உள்ள ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்டு’ அப்துல்கலாம் நினைவு நாளான கடந்த ஜூலை 27ம் தேதி அவரை பற்றி 100 தலைப்புகளில் கவிதை எழுத வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை ஏற்று சென்னை சென்ற அரவிந்தன் அப்துல்கலாமை பற்றி கனவு, லட்சியம், தொலைநோக்கு பார்வை, ஈடு இணையில்லா தலைவர், இளைஞர்களின் வழிகாட்டி உள்பட 100 தலைப்புகளில் 3 மணிநேரத்தில் 100 கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்த அரவிந்தனுக்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கி பாராட்டி உள்ளது.

Related Stories: