ரேலா மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் கல்லீரல் தானமளிப்பவருக்கு தழும்பில்லா ரோபோட்டிக் சிகிச்சை முறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையான ரேலா மருத்துவமனையில் முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் கல்லீரல் தானமளிப்பவர்களுக்கு தழும்பு ஏற்படாத வகையில் ரோபோட்டிக் முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை திட்டத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது ரேலா, ரேலா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள்  துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மஸ்தான், மா.சுப்பிரமணியன், சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, திமுக நிர்வாகி குரோம்பேட்டை காமராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பாக பயனளிக்கும், தங்களது குடும்ப உறுப்பினருக்கு கல்லீரலை தானமாக வழங்க, தானமளிப்பவருக்கு தூண்டுதலாக இருக்கவும் மற்றும் இந்த சிகிச்சையின் மூலம் உயிர்களை காப்பாற்றவும் இது உதவும். அத்துடன் இந்த சிகிச்சையில் தழும்புகள் மிக மிக குறைவான அளவிலேயே இருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்’’ என்று கூறினார்.ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது ரேலா பேசுகையில், ‘‘முதலமைச்சரின் சுகாதார காப்பீடு திட்டத்தின்கீழ் கல்லீரல் தானமளிப்பவருக்கு தழும்பில்லாத ரோபோட்டிக் அறுவை சிகிச்சையையும் சேர்க்க வேண்டும் என்ற யோசனையானது, சர்வதேச தரத்தில் சுகாதார வசதிகளை அனைத்து பொதுமக்களும் பெறுமாறு செய்ய வேண்டும் என்ற ரேலா மருத்துவமனையின் குறிக்கோளைச் சார்ந்ததாக இருக்கிறது என்றார்.

Related Stories: