நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்கக்கோரி பாஜ எம்பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்கும்படி, மக்களவை சபாநாயகருக்கு இக்குழுவில் இடம் பெற்றுள்ள 17 பாஜ எம்பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப் போவதாக  தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான, காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் அறிவித்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்கும்படி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இக்குழுவில் இடம் பெற்றுள்ள 17 எம்பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக பாஜ எம்பி.யான நிஷிகந்த் துபே டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெகாசஸ் விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செயல்பட அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, நிலைக்குழுவில் மட்டும் இதை பற்றி விசாரிக்க வலியுறுத்துவது ஏன்? தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழுவில் மொத்தமுள்ள 30 எம்பி.க்களில் 17 பேர், சசிதரூரை இக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும்படி கடிதம் கொடுத்துள்ளனர்,’’ என்றார்.  

* கோரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைப்பு

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நேற்று நடக்க இருந்தது. ஆனால், குழுவில் இடம் பெற்றிருந்த பாஜ எம்பி.க்கள் இதை புறக்கணித்தனர். இதனால், போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை (கோரம்) இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: