பாரத மாதா, பிரதமர் மோடி, அமித்ஷா பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது

மதுரை  : இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக பாஜக இன்று போராட்டம் நடத்த இருந்த நிலையில், போலீஸ் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சீல் வைக்கப்பட்டது.

இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார். அப்போது அவர் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்ததுடன்,

பாரத மாதாவை அவமதித்து பேசினார். மேலும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா திடீரென தலைமறைவாகி விட்டார். முன் ஜாமீன் கிடைத்த பிறகுதான் அவர் வெளியே வர திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் சிக்னல்களை வைத்து, மதுரை அருகேயுள்ள கள்ளிக்குடியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. எனவே இன்று அதிகாலை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவரை கன்னியாகுமரிக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

Related Stories: