ஒளிப்பதிவு திருத்த மசோதா பரிசீலனையில் மட்டுமே உள்ளது: தயாநிதிமாறன் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: ‘ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.    மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வரைவு ஒளிப்பதிவு(திருத்த) மசோதாவிற்கான காரணம் மற்றும் அவசியம் குறித்த விவரங்கள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.

* வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதாவினை தாக்கல் செய்யும் எண்ணம் அரசுக்கு உள்ளனவா? எனில் அதன் விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தை தெரியப்படுத்தவும்.

* ஒன்றிய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழை பெற்று வெளியாகும் திரைபடங்களை மறுபரிசீலனை செய்யும் விதிமுறைகள் உள்ளனவா? எனில் அதன் விவரம் மற்றும் நோக்கம் குறித்து தெரியப்படுத்தவும்.

* இந்த சட்ட மசோதாவை திருத்தம் செய்வதற்கு இத்துறை சார்ந்த பிரதிநிதிகளிடம் அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டனவா?  எனில் அதன் விவரம் குறித்தும் இத்துறைச் சார்ந்தவர்களின் பதில்கள் என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும்.

* திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை ஒன்றிய அரசு கலைத்துவிட்டனவா? எனில் அதற்கான காரணம் மற்றும் விவரம் குறித்து தெரியப்படுத்தவும்.

இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று பதிலளித்துள்ளது.  இதுதொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘ஒளிப்பதிவு திருத்த சட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ஆலோசனை அளவில் மட்டுமே இருப்பதாக அரசு பதிலளித்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அரசு இதுதொடர்பாக அடுத்து முடிவு எடுக்கும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட துறையினருடனும், பங்குதாரர்கள் மற்றும் சமூகத்திடம் கருத்து கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.  

Related Stories: